Forum

Please or Register to create posts and topics.

ஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுடன் பிரியுமா? அமைதியாக பிரியுமா?

இந்த உலகில் பிறந்த அனைத்து உயிர்களும், ஒரு காலத்திற்குப் பின் நிச்சயம் மரணிக்கும்.

மரணம் என்பது நிகழ்ந்தாலும், அது அவஸ்தை இல்லாமல் இருக்கவேண்டும்.

சிலர் கடவுளிடம் வேண்டும் போது யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் தூக்கத்திலேயே என் உயிர் போக வேண்டும் என்று வேண்டுவதும் உண்டு. நான் சிறு வயதாக இருக்கும் பொழுது என் தந்தை கிருபானந்தவாரியாரின் சொற்பொழிவுகளை கேசட்டில் போட்டு தினசரி கேட்பார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.

ஒரு நாள் வானொலியில் கிருபானந்தவாரியார் லண்டனில் இருந்து சென்னை திரும்பும் வழியில் விமானத்திலேயே, வள்ளல் பெருமான் ஆன முருகனிடம் வாரியார் இரண்டறக் கலந்தார் என்று செய்தி அறிவித்தார்கள். தூக்கத்திலேயே மரணம். யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை.

நாம் வாழும் காலத்திலேயே மிக மிக எளிமையாக வாழ்ந்து, நம் கண் முன்னே மரணித்த கலாம் அய்யாவின் மரணம் அனைவரும் அறிந்ததே.

ஐந்து நிமிடத்தில் அனைத்தும் அடங்கி விட்டது. மரண வேதனை இரண்டு நிமிடம் மட்டுமே. புண்ணிய ஆத்மாக்களின் மரணம் இப்படித்தான் இருக்கும்.

சிலர் நோயினாலோ அல்லது விபத்தினாலோ பாதிக்கப்பட்டு, கடுமையாக அவஸ்தைப்பட்டு, மலம், மூத்திரம் படுக்கையிலேயே கழித்து, அதில் புரண்டு, ஏன் உயிர் வாழ வேண்டும் என்று வாழ்க்கையே வெறுத்து மரணிப்பவரும் உண்டு.

சிலர் இது போன்ற அவஸ்தை தாங்காமல் தற்கொலை செய்பவர்களும் உண்டு. தற்கொலை செய்வது பாவம் என்று கருடபுராணத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொண்டால் நிச்சயம் நரகமே. நரகம் என்றால் எப்படி இருக்கும் அரசு மருத்துவமனையின் அனைத்து வார்டுகளிலும் சிகிச்சை பெறுபவரை பார்த்து மருத்துவமனையை ஒரு முறை சுற்றி வந்தால் தெரியும்.

( குறிப்பாக தீக்காயம், கேன்சர் வார்டு, ICU, விபத்து பகுதி)

சரி

ஆவி அவஸ்தையுடன் பிரியுமா? அமைதியாக பிரியுமா? வாருங்கள் பார்ப்போம்.

நேற்றைய பதிவில் குறிப்பிட்டது போல எந்த ஒரு லக்னத்திற்கும் அதன் எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானம். அதன் அதிபதி ஆயுள் ஸ்தானாதிபதி எனப்படுவார். சனி ஆயுள் காரகன்.

பொதுவாக எட்டாம் இடம் இயற்கை பாவ கிரகங்களால் சூழப்பட்டு சுப தொடர்பின்றி இருப்பது மரண அவஸ்தையுடன் மரணத்தைக் கொடுக்கும்.

எட்டில் இயற்கை பாவ கிரகங்களான செவ்வாய் + சனி, செவ்வாய் + ராகு, சூரியன் + சனி சேர்க்கை இருந்து ஆயுள் ஸ்தானத்திற்கும், ஆயுள் ஸ்தானாதிபதிக்கும் எந்தவித சுப தொடர்பும் இல்லை என்றால் மரணம் இயற்கைக்கு மாறாக அவஸ்தையுடன் இருக்கும்.

குறிப்பாக கன்னி லக்னத்திற்கு எட்டில் ராகு செவ்வாய் இருந்து செவ்வாய் இராகுவால் பலவீனபட்டு இருந்தால் கண்டிப்பாக விபத்து அல்லது இயற்கைக்கு மாறான மரணம் ஏற்படும்.

எட்டாம் இடத்திற்கு சுபர் தொடர்பு ஏற்பட்டால் நிலைமை மாறும்.

சனி இயற்கையில் மந்த கிரகம். எட்டாமிடத்தில் சனி இருப்பது தீர்க்காயுளை கொடுத்தாலும், கடைசி காலகட்டங்களில் உயிர் அவ்வளவு சீக்கிரமாக பிரியாது. அதுவும் சனி சுப தொடர்பு இருந்தால், இழுத்துக் கொண்டே தான் இருக்கும். உறவுகாரர்களுக்கு உரிய நேரத்தில் சொல்லி அனுப்ப முடியாது.

இட்லி சாப்பிட்டாங்கோ, சட்னி சாப்பிட்டாங்கோ, பதினோரு மணிக்கு ஹார்லிக்ஸ் குடிச்சாங்க என சொல்லும் சங்கதி ஆகத்தான் இருக்கும்.

எட்டில் சனி இருந்து சுப, அசுப தொடர்பு இரண்டும் பெற்றால் அவஸ்தையுடன் நீண்ட நாள் இழுத்து உயிர் பிரிய நேரிடும். கவுண்டிங்க கால்குலேட் பண்ணிட்டேதான் இருக்கணும்.

சனி கழிவுகளுக்கு அதிபதி. சனி எட்டில் இருக்கும் பொழுது, நான் என்ன சொல்ல வரேன்னு தான் நீங்களே புரிஞ்சுக்கோங்க. புளுத்து புண்ணாகி வெடித்து, வெம்பிதான் சாக நேரிடும்.

லக்னாதிபதி கெட்டு, எட்டாம் அதிபதி கெட்டு, எட்டாம் இடத்தில் பாவ கிரகங்களான செவ்வாய் ராகு இருந்தால் இயற்கைக்கு மாறான விபத்தில் மரணம் ஏற்படும். ராகு எட்டாம் இடத்தில் அமர்ந்து 8ம்பதியை முழுவதும் கிரகணம் செய்து சனியின் பார்வையில் இருந்தால் விஷம் அருந்தியோ, தூக்கிட்டோ மரணம் நேரும். இயற்கைக்கு மாறான மரணம்.

ஜாதகத்தில் ஆறாம் அதிபதி வலுப்பெற்று, எட்டாம் அதிபதி வலு குறைந்து ஆறாம் அதிபதியின் திசை நடக்கக்கூடிய காலகட்டங்களில் நோயினால் மரண அவஸ்தை உண்டு.

சனி சுப தொடர்பின்றி வலுத்தாலும் நோயால் அவதி உண்டு.

மேற்சொன்ன அமைப்புடன் லக்னாதிபதி, ஆறாம் அதிபதி, எட்டாம் அதிபதி ஒன்றாக இணைந்தால் படுக்கையில், பத்துமாதம் இருந்துதான், பாடை ஏற முடியும்.

எட்டாம் இடத்தையும், எட்டாம் அதிபதியையும், சனியையும் குரு பார்த்தால் நிம்மதியாக நித்திரையிலேயே உயிர் பிரியும்.

எட்டாம் இடத்தோடு குரு தொடர்புகொள்வது மரண அவஸ்தையை கொடுக்காது.

பலூனில் ஊசி குத்தி காற்று வெளியேறுவது போல் எளிதாக உயிர் பிரிந்து விடும்.

சுபக்கிரகங்களும் எட்டாம் இடத்தையும், அதன் அதிபதியையும் பார்க்கலாம்.

நோயினால் பாதிக்கப்பட்டு மரண அவஸ்தை பட்டு கொண்டிருப்பவர்கள் ஸ்ரீராமஜெயத்தை மனதுக்குள் சொல்லி கொண்டே இருங்கள். மரண பயம் நீங்கும். மரண அவஸ்தையும் நீங்கும். போகும் ஆத்மா புண்ணியமாக போய்ச்சேரும். மிருத்ஞ்ஜிய மந்திரத்தையும் சொல்லலாம்.

சில சில்வண்டு பயலுக, அறியா வயதில் பிரியாவை காதலித்த இந்த உயிர், பிரியாவிற்காக பிரியமுடன் பிரியுமா? என்று கேட்டு கடுப்பேத்துகிறார்கள் மை லார்ட்.

ஓம் நமசிவாய

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More