Forum

Please or Register to create posts and topics.

ஜோதிட கணக்குகள் ,விதிகளை நம்முடைய இஷ்டத்திற்கு வளைக்கலாமா? அது சரியாக வருமா?

ஜோதிட மாணவர்கள் ஆர்வலர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டுரை.

வளைக்கக்கூடாது. ஆனால் சில நேரங்களில் வளைக்க கூடிய சூழல், தானாகவே உருவாகும்.

பொதுவாக ஒரு ஜாதகம் கணிக்க, ஒரு ஜோதிடர் கேட்கும் அடிப்படையான விஷயங்கள் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் இந்த மூன்று மட்டுமே.

பிறந்த தேதி இல்லாமல் ஜாதகம் கணிக்கவே முடியாது.

பிறந்த நேரம் மாறினால், லக்னம் மாறி பலனும் மாறும்.

பிறந்த இடத்தினாலும் மாற்றம் உண்டா?

உண்டு.

இது எல்லா ஜோதிடருக்கும், தெரிந்த விஷயம் தான்.

இருந்தாலும் குறுகிய தூரத்திற்குள் மாற்றம் ஏற்படுமா? என்பதை பற்றி தான் இந்த பதிவு.

பொதுவாக ஒரு குழந்தை, ஒரு குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் ,குறிப்பிட்ட இடத்தில் பிறக்கிறது என்று வைத்து கொள்வோம்.

இரு குழந்தை ஓரே தேதியில், ஒரே நேரத்தில் மதுரையிலும் ,சென்னையிலும் பிறக்கிறது என்று வைத்து கொள்வோம்.

பிறந்த இடத்தின் மாறுபட்டால் சில நேரங்களில் இது போன்ற அமைப்பு லக்னத்தையே மாற்றிவிடும்.

அப்பொழுது நாம் சொல்லும் பலன்கள் நிச்சயமாக 300% பலன் தவறாகவே முடியும்.

பிறந்த தேதி ஒன்று, பிறந்த நேரமும் ஒன்று, பிறந்த இடத்தினால் லக்னமும் மாறி, பலனும் , சில நேரங்களில் மாறக் கூடிய அபூர்வ ஜாதகங்களும் உண்டு.

பிறந்த இடம் வெளி மாநிலம், வெளி நாடுகள் எனும்போது அதை கணிக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

அந்த அமைப்பில் நேற்று ஒரு ஜாதகம் வந்தது. அந்த ஜாதகத்தை விளக்கினால் உங்களுக்கு எளிதாக புரியும்.

இந்த ஜாதகர் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது திருமணம் நடக்கும் ?என்ற கேள்வியுடன் வந்தார்.

லக்ன வித்தியாசம், பிறந்த இடத்தால் வந்தது.(கீழே உள்ள போட்டோக்களை பார்க்கவும்)

அவர் கொடுத்த பிறந்த இடத்தின்படி (கோபி) தனுசு லக்னமாக வருகிறது.

ஏழாம் அதிபதி புதன் லக்னத்திற்கு பத்தாம் இடத்தில் உச்சம் பெற்றாலும் தனித்து அமரவில்லை.(பாதககாதிபதி)

புதன் வாங்கிய சாரமும் பாக்யாதிபதி சூரியனுடைய சாரம்.புதனுக்கு குரு பார்வை. திருமணம் இந்நேரம் ஆகியிருக்க வேண்டும் .

ஆனால் திருமணம் ஆகவில்லை என்று ஜாதகம் பார்க்க வந்திருக்கிறார் எனும்போது லக்னத்தை சரிபார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கோபிச்செட்டிபாளையத்திற்க்கு 35Kmல் இருக்கும் ஈரோட்டை, பிறந்த இடமாக வைத்து கணிக்கும் பொழுது மகர லக்னமாக ஆக வருகிறது. (மறுபடியும் போட்டோக்களை கவனிக்கவும்).

விஷயம் புரிந்தது.

மகர லக்னம். ஏழாம் வீட்டில் சனி. ஏழாம் வீட்டில் சனி இருந்தாலே தாமதத் திருமணம் தான் (பொதுவாக)

ஏழாம் அதிபதி சந்திரன் சூரியனுடன் இணைந்து அமாவாசை அமைப்பில் (பிரதமை, அமாவாசையை விட்டு லேசாக விலகிய அமைப்பு) அஸ்தமனத்தை பெறுகிறார்.

காதல் திருமணம் காமத்தை கொடுக்கக்கூடிய சுக்கிரன் எட்டில் மறைவு.

மகர லக்னத்திற்கு புத்திர ஸ்தானாதிபதியாக சுக்கிரனே வருவார். அந்த அமைப்பில் சுக்கிரனும் லக்னத்திற்கு எட்டில் மறைகிறார். காரகோ பாவ நாஸ்திபடி குரு 5ல்.

பலன் உள்ளங்கை நெல்லிக்கனி போல என பளிச்செனத் தெரிந்தது .

இங்கு தனுசு லக்னமாக அவர் கொடுத்த இடத்தை (கோபி )வைத்து பலன் சொன்னால் நிச்சயமாக பலன் தவறாக வரும்.

ஏன் ஜாதகமே தவறாகிவிடும்.

அவர் பிறந்த தேதி சரி, நேரம் சரி, இடமும் சரி.

ஆனால் இங்கு சில சூழ்நிலை காரணங்களால், இந்த லக்னத்திற்கு இந்த மாதிரியான விதி அமைப்பு இருந்தால் தான், இந்தப் பலன் நடக்கும் என்பதை எளிதாக அனுபவத்தின் மூலமே கணிக்க முடிந்தது.

இங்கு கணக்குகள் மற்றும் விதிகள் வளைக்கப்பட்டது. அதன் மூலமே சரியான பலன் எடுக்க முடிந்தது.

விதிகளை அவருக்குப் புரிய வைத்த போது விளங்கிக் கொண்டார்.

35 கிலோ மீட்டர் தூரம் ஒரு ஜாதகத்தின் பலனை மாற்றியமைக்கிறது என்றால் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.

சில சூழ்நிலை காரணங்களால், ஒரு சில நேரங்களில், ஒரு சில பலனை நாமாக மாற்றி அமைத்தால் தான் சரியான பலன் கிடைக்கும்.

அதுதான் தொழில் தர்மம்.

சரி, அவருக்கு திருமணம் ஆகுமா? ஆகாதா? அதை சொல்லிவிட்டு போங்கள் ஜோதிடரே.

அதை நான் ஜாதகரிடமே சொல்லிவிட்டேன். உங்களுக்குத் தெரிந்தால் நீங்களும் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

ஓம் நமசிவாய

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More