Forum

Please or Register to create posts and topics.

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? செய்ய வேண்டிய பரிகாரம்!

சமஸ்கிருத வார்த்தையில் பிரம்மம் என்றால் உயிராகும்.. ஹத்தி என்றால் கொலையாகும். உயிர்க்கொலை அல்லது உயிர்வதை செய்வதற்கு "பிரம்மஹத்தி" என்று பெயராகும்..

மனிதனை மனிதன் அழித்து விட்டால் முழுமையான பிரம்ம ஹத்தி தோஷம் ஆகும். ஒரு மனிதன் பசுவை அடித்து துன்புறுத்தினாலோ, கொன்றாலோ அது "கோ"ஹத்தி தோஷம் ஆகும்.. பிராமணர்களை துன்புறுத்தினாலோ, கருக்கலைப்பு செய்தாலோ பிரம்ம ஹத்தி தோஷம் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது..

பூர்வ ஜென்மத்தில் செய்த நல்வினை, தீவினை, பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே இந்த ஜென்மத்தில் நல்ல வாழ்க்கையோ அல்லது கஷ்டமான தரித்தரமான வாழ்க்கையையோ அடைவதற்கு காரணமாக இருக்கிறது என்பது ஜோதிட அறிஞர்களின் கருத்தாக உள்ளது ..

ஜோதிடத்தில் பூர்வ புண்ணியத்தை குறிப்பது ஐந்தாமிடம் ஆகும்.. இது சிந்தனை, செயல்திறன் மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம் ஆகும்.. இந்த பூர்வ புண்ணியாதிபதி (ஐந்தாம் அதிபதி) ராகு கேதுக்களுடன் சேர்ந்து 6, 8, 12 ம் இடங்களில் போய் பகை, நீசம் பெற்று கெட்டு மறைவது பிரம்ம ஹத்தி தோஷம் ஆகும்.

ஐந்தாம் அதிபதியும் ஆறாம் அதிபதியும் இணைந்து கொடிய மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து கொடிய பாவிகள் தொடர்பில் இருப்பதுவும் ஒருவகையில் பிரம்ம ஹத்தி தோஷம் ஆகும்.

ஐந்தாம் அதிபதியும், பன்னிரண்டாம் அதிபதியும் இணைந்து 6, 8, 12 போன்ற மறைவிட, துர்ஸ்தானங்களில் அமர்ந்து பகை, நீசம் பெற்று லக்ன பாவிகளால் கடுமையாக பாதிக்கப்பட இதுவும் ஒருவகையான பிரம்மகத்தி தோஷம் ஆகும்.

அதேபோல புண்ணிய காரகன் என்று வர்ணிக்கப்படும் குருபகவான் ராகுவுடன் சேர்ந்து கெட்டு குருசண்டாள யோகம் எனும் யோகத்தை பெற்று குருபகவான் பாவியாகும்போதும், குருபகவான் ஆதிபத்திய விஷேசம் இல்லாத சனியுடன் சேர்ந்து மிக நெருங்கி பலமிழக்கும்போது, ஐந்தாமாதிபதியும், ஐந்தாமிடமும் மேற்சொன்ன அமைப்பில் பலமிழக்கும்போதும், மேற்சொன்ன அமைப்புக்கள் இருந்து மனசு காரகன் சந்திரனும், புதனும் பாதிக்கப்பட நிச்சயமாக அது பிரம்ம ஹத்தி தோஷம் என்ற அமைப்பில் வரும்.. அதாவது ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி, காரகன் குரு, சந்திரன், புதன் கடுமையாக பாதிக்கப்பட இந்த பிரம்ம ஹத்தி உண்டாகும் என்று புரிந்து கொள்ள முடிகிறது.

பூர்வ ஜென்மத்தில் கொலை செய்தவர்களுக்கு இந்த ஜென்மத்தில் இந்த தோஷம் பற்றிக் கொள்ளும் என்று சாஸ்திரம் கூறுகிறது. இதனால் சித்த பிரமை, பைத்தியம் பிடித்தல், மனநிலை பாதிப்பு, குழந்தை இன்மை, பிள்ளைகளால் அவமானம், உடல் நலக்கோளாறுகள், வறுமை, துன்பம்,தொல்லை, கஷ்டம், துரதிர்ஷ்டம் போன்ற கெட்ட பலன்கள் நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதற்கு உதாரணமாக ஒரு ஜாதகத்தை என்னால் சொல்ல முடியும். 1940 ல் பிறந்த ஒரு பெரியவர் ஜாதகம். அவர் பிறந்தது கடக லக்னம். அவருக்கு மேச ராசி. கார்த்திகை நட்சத்திரம். சந்திரனுடன் கேது. பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் கடக லக்னத்திற்கு எட்டில் கும்பத்தில். புதன் ராகுவுடன் துலாத்தில். குருபகவான் ஒன்பதாம் இடமான மீனத்தில் சனியுடன் இணைவு சனி கடக லக்னத்திற்கு அட்டமாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

சுக்கிரன் சூரியனுடன் ஐந்தாமிடத்தில் அஸ்தங்கம்.

இவருக்கு ஐந்தாமிடத்து அதிபதி செவ்வாய் எட்டில், கடக லக்னத்திற்கு ஆகாதவரான சனியின் கும்ப வீட்டில் அமர்ந்து, ஐந்தாமிடத்திற்கு காரக கிரகமான குரு பகவான் கடக லக்னத்திற்கு அட்டமாதிபதியான சனியுடன் மிக நெருங்கி பலவீனமான காரணத்தாலும், மனசு காரகன் சந்திரனும், புக்தி காரகனுமான புதனும் ராகு கேதுக்களால் பீடிக்கப்பட இவருக்கு இளமையில் புக்தி கோளாறுகள் ஏற்பட்டது.

இந்த ஜாதகருக்கு இளமையில் மனநிலை பாதிப்பு ஏற்பட்டு சரியாகியது...இவரது குடும்பத்தார் இவருக்கு பேய் பிடித்து விட்டது. முனி பிடித்துவிட்டது என்று போகாத கோவில் இல்லை. செய்யாத வைத்தியம் இல்லை. இவருக்கு மத்திம வயதில் கடுமையான நோய் ஏற்பட்டு பல நாட்கள் படுத்த படுக்கையாக கிடந்து பின்னர் நலம் பெற்றார்.

இவர் வறுமை, துன்பம், தொல்லை, கஷ்டம் என்று கடைசி வரை மிக சாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்தார். அமாவாசை திதி அருகில் வரும் போது அதிகமாக உணர்ச்சிவயப் பெற்று காணப்படுவார்.

இவரே தன்னை பற்றி சொல்லும் போது சிறுவயதில் அவரது பெற்றோர் இந்த தோசம் இருந்த காரணத்தினால் ராமேஸ்வரம் அழைத்து சென்றதாகவும் , அந்த நினைவுகள் இன்னும் பசுமரத்தாணிபோல நெஞ்சில் நிலைத்து நிற்பதாகவும் என்னிடம் ஒருமுறை தெரிவித்தார்.

இன்னொரு உதாரணமாக ஒருவருக்கு தனுசு லக்னம். தனுசு லக்னத்திற்கு அட்டமாதிபதியான சந்திரபகவான் ஐந்தாம் இடத்தில் இருந்து பாவத்தன் மை அடைந்து, அந்த சந்திரனுக்கு அதாவது மேஷ ராசிக்கு ஐந்தில் புதன் அமர்ந்து இன்னும் புரியும் படியாக லக்னத்துக்கு அட்டமாதிபதி லக்கனத்திற்க்கு ஐந்தில் அமர்ந்து, ராசிக்கு 3, 6-க்குடைய புதன் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து, லக்னம், ராசி இரண்டிற்கும் ஐந்தாமிடம் பாதிக்கப்பட்டு,தனுசு லக்கினத்திற்கு அட்டமாதிபதியான சந்திர தசை நடந்த காலத்தில் மனநிலை பாதித்து சந்திர தசை முடிந்த பிறகு பூரணமாக குணம் பெற்ற ஜாதகத்தையும் நாம் பார்க்க முடிகிறது. சந்திரன் மனசு காரகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமாயணத்தில் ராமர் ராவணனை வதம் செய்த பிறகு, ராமருக்கு பிரம்மகத்தி தோஷம் பற்றிக் கொண்டது. இதைப்போக்க ராமேஸ்வரம் வந்து சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷத்தை போக்கிக் கொண்ட இடமே ராமேஸ்வரம் ஆகும்.

ராமேஸ்வரமும் ஒரு கண்கண்ட பரிகார ஸ்தலம் ஆகும்.

இன்னொன்று கும்பகோணத்திற்கு எட்டு கிலோ மீட்டருக்கு அருகில் இருக்கும் அற்புத சிவஸ்தலம் தான் திருவிடைமருதூர். ஒரு சுப பலம் பெற்ற நாளில் இத்தலத்திற்குச் சென்று கோவிலுக்கு எதிர்புறம் உள்ள தீர்த்தத்தில் நீராடி கோபுர தரிசனம் செய்தபிறகு விநாயகருக்கு தீபமேற்றி வழிபட வேண்டும். பின்பு அங்குள்ள 27 நட்சத்திர லிங்கங்களில் உங்களுடைய ஜென்ம நட்சத்திர லிங்கத்திற்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய வேண்டும் அடுத்து நவகிரகங்களை வணங்கியபின் மூலவரான ஸ்ரீ மகாலிங்க சுவாமிகளுக்கு நிறைவான அர்ச்சனை அபிஷேகம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு சென்ற வழியாக திரும்பாமல் அம்பாள் சன்னதிக்கு சென்று அர்ச்சனை செய்து, அம்பாளை நமஸ்கரித்த பிறகு வெளிப்பிரகாரம் சென்று வலம் வந்து கொடிமரத்திற்கு அருகே நமஸ்காரம் செய்துகொள்ளவேண்டும். சிவபெருமானை தரிசிக்க செல்லும் போது பிரம்மகத்தி தோஷம் சன்னதி வாயிலில் நம்மை விட்டு விலகி, திரும்ப நாம் வந்தால் நம்மைப் பற்றிக் கொள்ளலாம் என்று சன்னதி வாசலில் காத்திருக்கும்.

எனவே சென்ற வழியாக திரும்பாமல் அம்பாள் சன்னதி வழியாக திரும்பி வரவேண்டும் என்பது சாஸ்திர விதி.

இது பிரம்மஹத்தி தோஷத்திற்கு உண்டான முறையான பரிகாரம் என்றாலும் அனைவரும் இத்திருத்தலத்திற்கு சென்று ஸ்ரீ மகாலிங்க சுவாமியை தரிசித்தால் வறுமை, துன்பம், நோய் கண்டங்கள் மனநிலை பாதிப்பு பைத்திய நோய், தரித்திரம், தொழில் முடக்கம் போன்ற தீய பலன்கள் விலகி நல்ல பலன்கள் உண்டாகும்.

போன ஜென்மத்தில் பாவம் செய்ததால் இந்த ஜென்மத்தில் இந்த பிறவி எடுத்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் இப்பிறவியில் உள்ள அனைத்துப் பாவங்களையும் போக்கி கொள்ள கும்பகோணத்திற்கு 8 கிலோமீட்டர் அருகில் இருக்கும் திருவிடைமருதூர் சென்று நம் பாவங்களையெல்லாம் போக்கிக்கொள்வோமாக!

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More