Forum

Please or Register to create posts and topics.

புத்திர தோஷம் என்றால் என்ன?

சென்றமுறை சனியைப் பற்றிய "சிறு குறிப்பு "வரையும் போது சனி ஐந்தில் இருந்தால் புத்திர தோஷம் என்று பொதுவான ஒரு பலனை கூறிவிட்டேன்.

அதாவது ஐந்தாமிடம் எனும் திரிகோணத்தில் சனி அமர்ந்து ஐந்தாமிடத்தை கெடுப்பார் என்பதோடு நிறுத்தி விட்டேன்.

எல்லாவற்றிற்கும் விதிவிலக்குகள் இருப்பது போல இதற்கும் விதிவிலக்குகளும் இருக்கவே செய்கிறது.

ஐந்தாமிடத்தில் இருக்கும் சனி லக்ன சுபர்களோடு இணைந்தோ , குருபகவான், வளர்பிறை சந்திரன், புதன், சுக்கிரன் இவர்களோடு இணைந்தோ அல்லது பார்வை போன்ற தொடர்புகள் இருக்கும் பட்சத்தில் அந்த சனி சுபத்தன்மை அடைந்து புத்திர தோசத்தை தரமாட்டார்.

ஆரம்ப நிலையில் இருக்கும் சிலர் தனித்து ஐந்தாமிடத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற சனியோ அல்லது செவ்வாயோ புத்திர தோசத்தை தரமாட்டாரர்கள் என்று நினைத்துக் கொண்டு இருப்பது "சிவப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் "என்று நினைப்பது போன்றதுதான். அவர்கள் ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்றாலே அந்த கிரகம் நன்மையைத்தான் தரும் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். அது தவறு என்பதை போக போக தெரிந்து கொள்வார்கள்.

ஐந்தாமிடத்தில் இருக்கும் ராகு பகவான் கூட சில நேரங்களில் புத்திர தோசத்தை தருகிறார்.. இன்னும் சிலர் புத்திர தோஷம் என்றாலே குழந்தையே இல்லை என்று தவறாக புரிந்து கொள்கிறார்கள்.

பெண் குழந்தைகளாக பிறப்பது, தாமதமான புத்திர பாக்கியம், மிகவும் வயதான பிறகு கிடைக்கும் புத்திர பாக்கியம், பிரயோசனம் இல்லாத குழந்தைகள், ஊதாரி பிள்ளைகள், குறைபாடுகளோடு பிறந்து அந்த குழந்தைகளை பற்றி வாழ்நாள் முழுவதும்வேதனைப்படக் கூடிய அமைப்பு , ஆண் குழந்தை இல்லையே என்ற வேதனை, தான் உயிரோடு இருக்கும் போதே பிள்ளைகளை பறிகொடுப்பது, பிள்ளைகள் இருந்தும் அவர்களை காண முடியாத ,கொஞ்ச முடியாத நிலை போன்ற அனைத்தும் புத்திர தோசத்தில்வரும்.

" தானென்ற பஞ்சமத்தில் கொடியோர் நிற்கில்,
தாரணியில் குடிவிளங்க புத்திரர் இல்லை"
"சந்திர காவியம் "என்ற நூல் புத்திர தோசத்தை பற்றிக் கூறும்போது

அஞ்சு,ஒன்பான், ஒன்றில் அரவு,சனி, குளிகன் மிஞ்சவே நோக்கமாக இருக்க
வஞ்சியரே ஸர்ப்பத்தை கொன்றதினால்
சந்ததிக்கு விற்பத்தி சொன்னோம் விரைந்து" என்று கூறுகிறது.

மேற்கண்ட பாடலில் கண்டபடி ராகு, சனி, செவ்வாய், போன்ற கிரகங்கள் ஐந்தில் இருந்தாலே புத்திர தோஷம் என்று சிலர் தடாலடியாக சொல்லி விடுகின்றனர்.

ஒற்றை கிரகத்தை மட்டுமே வைத்துக் கொண்டு நாம் பலன் சொன்னால் பலன் தப்பவே செய்யும். புத்திர பாக்கியத்தை பற்றி அறிய ஐந்தாமிடம், ஐந்தாம் அதிபதி, புத்திர காரகனாகிய குருபகவான், குருவின் வீடுகளான தனுசு, மீனம் போன்ற இத்தனை உபகரணங்களையும் கொண்டே நாம் புத்திர பாக்கியத்தை அளவிட முடியும். அதுவே சரியாகவும் இருக்கும்..

"பஞ்சம வீட்டில் ராகு
படமிட ஐந்துக்குற்றோன்
வெஞ்சினம் கொண்டாரெட்டில்
வீழ்ந்திட உதித்தோரெல்லாம்
கொஞ்சிடுட குழவியற்று
குவலயத்தில் உழல்வரே"

என்ற மேற்கண்ட பாடல் சொல்வது என்னவென்றால் ஐந்தாமிடத்தில் ராகு பகவான் வீற்றிருந்து, அந்த ராகு பகவானுக்கு வீடுகொடுத்தவனும் லக்னத்திற்கு 6, 8, 12 ல் மறைய, புத்திர காரகன் குருபகவானும் அஸ்தங்கம், கிரகணம் போன்ற நிலையை அடைய அந்த ஜாதகனுக்கு குழந்தை இருக்காது என்று இந்த செய்யுள் கூறுகிறது..

மேற்படியான செய்யுளுக்கு ஏற்றவாறு நான் ஒரு ஜாதகத்தை பார்க்க நேர்ந்தது.

ஒரு பெண்மணி மகர லக்னத்தில் பிறந்திருந்தார். ஐந்தாமிடமான ரிஷபத்தில் ராகு பகவான் நீசம். மகர லக்னத்திற்கு ஐந்தாமிட அதிபதியான

சுக்கிரன் லக்னத்திற்கு எட்டில் சிம்மத்தில் பகைஷேத்திரமாக வீற்றிருக்கிறார். குருபகவானும் மேற்படியான அமைப்பில் கெட்டு போக

அந்த பெண்ணுக்கு தாம்பத்ய சுகமும் கிட்டாமல் போய், குழந்தையும் இல்லை. 40 வயதை நெருங்குகிறார்.

சிலர் ஐந்தில் ராகு இருந்தாலே குழந்தை இல்லை என்று பொருத்தம் பார்க்கும் போது அந்த ஜாதகத்தை நிராகரித்து விடுகின்றனர். அந்த ராகுவுக்கு குரு பார்வை இருக்கிறதா? அவ்வீட்டின் அதிபதி எவ்வாறு உள்ளார்?

புத்திர காரகன் எப்படி உள்ளார் என்று பார்ப்பதே இல்லை. குருபகவானும், லக்னாதிபதியும் மட்டும் நல்ல நிலையில் இருந்தால் கூட போதுமானது.. எப்படியும் ஒரு குழந்தையாவது கிடைத்துவிடும்.

ஐந்தாமிடத்தைப் பற்றி காணும் போதே பத்தாம் இடத்தையும் காண வேண்டியது ரொம்ப அவசியம் ஆகிறது.

பத்தாமிடம் கர்மஸ்தானம் என்பதால் கொள்ளிவைக்க ஆண் குழந்தை உண்டா? இல்லையா என்பதைப்பற்றி இந்த பாவகத்தை வைத்துத்தான் நாம் கண்டுபிடிக்க முடியும்.

பத்தாமிடத்தை குரு பார்க்க கர்மபுத்திரன் பிறப்பான் என்று ஒரு விதி உள்ளது.

அதேபோல கர்ம காரகத்துவம் சனி , செவ்வாய்க்கும் கூட உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னிடம் திண்டுக்கல்லை சேர்ந்த மகர லக்னம், ரிஷப ராசியை சேர்ந்த ஆதிபத்திய விஷேசம் இல்லாத குரு தசை நடந்துகொண்டிருந்த ஒருவர் ஜாதக ஆலோசனைக்காக வந்தபோது, அவருக்கு மூன்று பெண் குழந்தைகள் நான்காவதாக பையன் கிடைப்பானா?
என்று கேட்டு வந்தார்.

அவருக்கு ஆண் குழந்தை இல்லையே என்ற பெரிய கவலை. அப்படியொன்றும் அவர் கோடீஸ்வரன் ஒன்றும் கிடையாது.

அந்த கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு வாரிசு வேண்டுமே என்று கேட்டால் கூட ஒரு நியாயம் இருக்கிறது.. அவர் ஒரு அன்றாடங்காய்ச்சிதான்.அவர் மனைவிக்கோ "பேமிலி பிளானிங் "
செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம். இவர் ஆண் குழந்தை வேண்டும் என்று ஒரே பிடிவாதம்.

இதனால் இவருடைய குடும்பத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள். மாமனார், மாமியார், மனைவியோடு வம்பு, வழக்கு, சண்டை. வாக்கு வாதங்கள். பயங்கரமான மனக்குழப்பத்தில் என்னிடம் ஆலோசனை கேட்டு வந்தார். இவருடைய ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகநிலைகளை கருத்தில் கொண்டும், ஆதிபத்திய விஷேஷம் இல்லாத குருபகவான் உங்களுக்கு ஆண் குழந்தையை தர மாட்டார். ஆண் குழந்தை இல்லையே என்ற குறை ,கவலை வாழ்நாள் முழுவதும் இருக்கும். தயவுசெய்து போனவுடன் கருத்தடை ஆபரேஷன் செய்து கொள்ளுங்கள். நான்காவதும் பெண் குழந்தையே பிறந்து விட்டால் இன்றைய பொருளாதார சூழலில் நான்கு குழந்தைகளையும் வளர்ப்பது பெரும்பாடு ஆகிவிடும் என்று ஆலோசனை கூறி அனுப்பினேன்.

இதை இங்கே ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் ஆதிபத்திய விஷேஷம் இல்லாத, பாவத்தன்மை அடைந்த குருபகவான் பெண் குழந்தைகளையே
அதிகம் தந்து ஆண் குழந்தைக்காக ஏங்க வைக்கிறார். மேலும் குருபகவான் ஐந்தாம் பாவத்தில் அமரும் போது காரகோ பாவநாஸ்தியை அடைந்து பெண் குழந்தைகளை அதிகமாக தருகிறார்.

இன்னொரு மகர லக்னம்,மகர ராசியை சேர்ந்த ஒரு அண்ணனுக்கு குரு ஆறில் பகை பெற்று தசையை நடத்திய காரணத்தாலும், ஐந்தாம் அதிபதியான சுக்கிரன் ஐந்துக்கு பன்னிரண்டாம் இடமான மேசத்தில் அமரப்பெற்று எட்டில் இருக்கும் சனி ஐந்தாம் இடத்தை பத்தாம் பார்வையால் பார்த்த காரணத்தினாலும் , விரையாதிபதி விரையத்தை பகைபெற்று பார்த்ததினால் குழந்தை இல்லாமல் குழந்தைக்காக ஏழுலட்சங்கள் செலவளித்து கடனில் உள்ளார். குழந்தைக்காக கடன்..கண்டிப்பாக அவருக்கு ஒரு குழந்தை மருத்துவ சிகிச்சைக்கு பிறகு கிடைக்கும்.

இன்னொருவர் கும்பலக்னம். ஐந்தாம் இடத்தை பாவிகள் பார்த்து, ஐந்தாம் அதிபதி யான புதன் அஸ்தங்கம் பெற்று பகை வீட்டில் அமர்ந்த காரணத்தாலும், புத்திர காரகன் குருவும், ராகுவுடன் கிரகணம் பெற்று ,லக்ன பாவியான சந்திரனுடன் இணைந்த காரணத்தாலும் மிகவும் தாமதமான புத்திர பாக்கியம்.

மேற்படி ஐந்தாம் இடம், ஐந்தாம் அதிபதி மற்றும் புத்திர காரகன் குருபகவான் கெட்டு குருவின் வீடுகளான தனுசு மற்றும் மீனத்தில் பாவிகள் அமர குழந்தை பாக்கியம் கிடைப்பதில் இடைஞ்சல்கள், தொல்லைகள் இருந்தே தீரும். நல்ல குழந்தைகள் கிடைக்க குருவின் வீடுகளான தனுசு, மற்றும் மீனம் கெடக்கூடாது என்பது ஒரு விதி.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More