Forum

Please or Register to create posts and topics.

ஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வரும் காலத்தை) துல்லியமாக கணிக்க முடியுமா?

முடியும் ஆனால் முடியாது என்று இரண்டு விதமான பதில்களை இங்கு கூறலாம்.
என்ன குழப்புகிறீங்க?

தெளிவா, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று தெளிவான பதிலை சொல்லுங்கள் என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது.

கட்டுரையைத் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்துப் படியுங்கள். அதிலேயே விடை இருக்கிறது.

பிறப்பும், இறப்பும் சந்தேகமின்றி சாட்சாத் சங்கரனின் கையில்தான். இதை யாரும் மறுக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

ஜோதிடத்தில் ஆயுளை கணிப்பதற்கு சில விதிமுறைகள் கூறப்பட்டுள்ளன.

அதை வைத்து ஓரளவு ஆயுளை கணிப்பதற்கு மட்டுமே, நாம் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம்.

முழுவதுமாக ஆயுளை கணிக்க ஆண்டவனால் மட்டுமே முடியும்.

சரி ஜோதிடப்படி ஆயுளை கணிக்க விதிகள் என்னென்ன? அதைப் பார்ப்போம் வாருங்கள்.

பொதுவாக இலக்கினம் என்பது உயிர் பிறக்கும் அல்லது உயிர் வாழும் அமைப்பை குறிப்பது.

எட்டாம் இடம் என்பது மறைவு ஸ்தானம் அதாவது உயிர் உடலை விட்டு வெளியேறும் மரணத்தைப் பற்றி குறிப்பது.

பொதுவாக ஜாதகம் பார்க்கும் பொழுது அடிக்கடி கேள்விப்படும் வார்த்தை,
லக்னாதிபதி முழு பலத்துடன குறைவின்றி பங்கப் படாமல் இருக்க வேண்டும் என்று ஜோதிடர் கூற கேள்விபட்டிருப்போம்.

இங்கு பங்கம் என்பது நீசம், அஸ்தமனம், கிரகண அமைப்பில் ராகு, கேதுவுடன் நெருக்கமாக இணைவது, பாவ கிரகங்களின் பார்வையை பெறுவது என இதுபோல இன்னும் சிலவற்றை சொல்லலாம். எந்த ஒரு லக்னத்திற்கும் அதன் எட்டாம் அதிபதி ஆயுள் ஸ்தானாதிபதி எனப்படுவார்.

பொதுவாக எந்த ஒரு ஜாதகத்திலும் எட்டாம் அதிபதி வலுப்பெற்று, திசை நடைமுறைக்கு வருவது நல்லதல்ல. ஆனால் எட்டாம் அதிபதி ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும்.

அப்பொழுதுதான் தீர்க்காயுளோடு வாழ முடியும்.

அதுபோல் லக்னாதிபதி வலு பெற்று இருந்தாலும் எட்டாம் அதிபதி வலு குறையக்கூடாது. மத்திம ஆயுளை கொடுக்கும்.

சனியே ஒரு ஜாதகத்தில் ஆயுள்காரகன்.சனி வலுகுறைவதும் ஆயுளுக்கு பங்கமே
லக்கினாதிபதியும், 8ம் அதிபதியும்,சனியும் முழுவதுமாக பலம் குறைந்தால், சங்கு சத்தம் Sudden ஆ கேட்கும்.

ஆயுள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. பாலாரிஷ்டம் - 12 வயதிற்குள் இறப்பது.
2. அற்பாயுள் - 30 வயதிற்குள் இறப்பது.
3. மத்திம ஆயுள் - 65 வயதிற்குள் இறப்பது.
4. தீர்க்காயுள் என்பது - 80 வயதிற்குமேல் இறப்பது.

சரி, ராசிக்கட்டத்தில் 12 லக்னங்கள் உள்ளன. அவை முறையே சர, ஸ்திர, உபய லக்னங்கள் என பிரிக்கப்பட்டுள்ளது.

சர லக்னங்கள் மேஷம், கடகம், துலாம் மகரம். இந்த லக்னத்திற்கு அதன் இரண்டாம் வீட்டு அதிபதியும், ஏழாம் வீட்டு அதிபதியும் மாரகாதிபதி எனப்படுவர் .
மாரகர் என்றால் மரணத்தை கொடுப்பவர் என்று பொருள்.

ஸ்திர லக்னங்கள் எனப்படும் ரிஷப, சிம்ம, விருச்சிக, கும்ப லக்னத்திற்கு மூன்றாம் அதிபதியும், 8ம் அதிபதியும் மாரகத்தை கொடுப்பார்கள்.

உபய லக்னம் எனப்படும் மிதுனம், கன்னி, தனுசு மீனத்திற்கு ஏழாம் அதிபதியும் 11ஆம் அதிபதியும் மாரகாதிபதிகள் எனப்படுபவர்.

இதுபோக எந்த ஒரு லக்னத்திற்கும் இரண்டாம் அதிபதியும், ஏழாம் அதிபதியும், மூன்றாம் அதிபதியும் பொது மாரகர்கள் எனப்படுபவர்.

அதுபோல் ராகு கேதுக்கள் தான் நின்ற வீட்டின் பலனை எடுத்து செய்யும் என்பதால் ராகு, கேதுக்கள் மாரக ஸ்தானத்தோடு தொடர்புகொண்டு திசை நடக்கும் போது சிலருக்கு மாரகத்தை கொடுக்கும். ஜோதிடமே கால, தேச, சுருதி வர்த்தமானத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஜோதிடத்தை 2 விதிகளில் எளிதாக பிரிக்கலாம்.
A. நம்முடைய லக்னத்திற்கு யோகம் தரும் கிரகங்கள் எந்த விதத்திலும், பங்கப்படாமல், மனதும் , உடலும் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் பொழுது அடுத்தடுத்த திசைகள் யோக திசைகளாக இருந்தால், நல்ல யோக பலனை அனுபவிக்கலாம்.
B.கெடுதல் செய்யக்கூடிய கிரகங்கள் ஜாதகத்தில் எந்த விதத்திலும் வலுவாக இருந்து திசைகள் நடைமுறைக்கும் வரக்கூடாது வந்தால், அது அந்த ஜாதகத்திற்கு, எந்த ஆதிபத்திய காரகத்துவத்தை பெற்றுக் உள்ளதோ அது சார்ந்த வழிகளில் பிரச்சினையை கண்டிப்பாக கொடுக்கும்.

ஜாதகத்தில் யோகம் தரும் கிரகங்கள் வலுவாக அமைந்தது, எதிர்மறை பலனை தரும் கிரகங்கள் வலு குறைய வேண்டும்.

அப்பொழுதுதான் அடுத்த கட்ட வளர்ச்சி என்பது இருக்கும்.
இதே விதியை ஆயுளுக்கு பொருத்திப் பார்ப்போம்.

மாரகத்தை வலுவாக நடக்கக்கூடிய திசைகள் நடந்து, அவை பங்கப் படாமல் முழு பலத்துடன் திசை நடத்தும் பொழுது ஒருவருக்கு மரணம் ஏற்படும் அல்லது ஏற்படலாம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஜாதகத்தில் மிதுன லக்கினத்திற்கு மாரகாதிபதி, பாதகாதிபதி கேந்திராதிபதி என்ற தன்மை பெற்ற குரு மாரக ஸ்தாதானத்தில் பங்கமில்லாமல் முழு பலம் பெற்றிருந்தார்.

குரு திசையில் அட்டமாதிபதி சனி புத்தியில் மரணம் நிகழ்ந்தது.

பாவ கிரகங்கள் ஆயுள் ஸ்தானத்தைப் பார்ப்பதும் நல்லது அல்ல.

சுப கிரகங்கள் ஆயுள் ஸ்தானத்தையும், ஆயுள் ஸ்தானாதிபதியையும், சனியையும் நோக்குவது நல்லது.

சனி எட்டில் சுபத்துவ அமைப்போடு இருக்கலாம்.
ஆனால் எட்டாம் வீட்டை சனி பார்க்கக்கூடாது.

மாரகத்தை கொடுக்கக்கூடிய கிரகங்கள் ஜாதகத்தில் பங்கப் படாமல் வலுவுடன் இருந்து திசை நடத்தும் போது கண்டிப்பாக மாரகம் ஏற்படும் அல்லது ஏற்படலாம். மேற்சொன்ன விதிகளை எல்லாம் ஒவ்வொன்றாக அடுக்கி ஒரே புள்ளியில் இணையுங்கள்.
ஓரளவு விடை தென்படும்.

சரி இவற்றையெல்லாம் வைத்து ஆயுளை கணிக்க முடியுமா? இருங்கள். இன்னும் சில விதிகள் இருக்கிறது.

உதாரணமாக ஒரு குடும்பத்தில் குடும்ப தலைவர் மத்திம வயதில் (35 வயது) திருமணமாகி, குழந்தை பெற்று உயிரிழக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

அவருடைய மனைவி ஜாதகத்தில் கணவர் அமைப்பும், மகன் ஜாதகத்தில் தந்தை அமைப்பும் கண்டிப்பாக பாதிக்கப்பட்டிருக்கும்.

இதே அமைப்பில் மரணப் படுக்கையில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம்.

சம்பந்தப்பட்டவரின் லக்னம், லக்னாதிபதி, ஆயுள் ஸ்தானாதிபதி, சனி, நடக்கும் தசாபுக்திகள், கோசாரத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி, மனைவிக்கு கணவன் இறக்கும் நிலையான களத்திர ஸ்தானாதிபதி கெட்டு, மாங்கல்ய ஸ்தானமும் கெட்டு, மகனுக்கு கர்மம் செய்ய திசை நடந்து, மகன் ஜாதகத்தில் ஒன்பதாமிடம், சூரியன் கெட்டு கோட்சாரத்தில் மகனுக்கும் ஏழரை சனி அஷ்டமசனி போன்ற அமைப்புகள் இருந்தால் கர்மம் செய்யக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.

இவற்றையெல்லாம் கவனமாக கணித்து நாம் கணக்குப் போட மட்டுமே முடியும்.

இவற்றையெல்லாம் மாற்றும் வல்லமை எம்பிரானுக்கு மட்டுமே உண்டு.
கிரிக்கெட்டில் ஸ்டம்பை நோக்கி பந்தை வீசுகிறோம்.

பந்து தரையில் குத்தி ஸ்விங் ஆகி விலகிச் சென்றால் யார் பொறுப்பு?

பந்தை நீங்கள் ஸ்டெம்பிற்கு தான் குறி வைத்தீர்கள். அது விலகிச் செல்ல வேண்டுமா?விக்கெட்டை வீழ்த்த வேண்டுமா என்பதெல்லாம் இறைவன் கையில் உள்ளது.
கையில் இருந்து தரையில் குத்தும் தூரம் வரை மட்டுமே உங்களுக்கு அனுமதிக்கப்படும். விக்கெட்டை நோக்கி செல்ல வைப்பது விதியாக இறைவன் கையில்.
மருத்துவருக்கும் அதே நிலை தான்.

அதற்காக சைனைடு சாப்பிட்டவன் சாவானா? பிழைப்பானா? என்று சந்தடி சாக்கில் கேட்கக்கூடாது.

ஒரு நல்ல ஜோதிடருக்கு மரணத்தைப பற்றி கணிக்க தெரிந்தாலும் அதை வெளிப்படையாக கூறக்கூடாது.
இறைவன் நினைத்தால் எப்பேர்ப்பட்ட விதியையும், மாற்றமுடியும்.

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிக்கும் இறைவன், கணநேரத்தில் அனைத்தையும் மாற்றவும் முடியும்.

மார்க்கண்டேயன் மரணத்தை வென்று, மாறாத இளமையுடன், என்றும் சிரஞ்சீவியாக இருக்க இறைவன் அருள் புரிந்தான் அல்லவா?

இறைவன் நினைத்தால் மரணப்படுக்கையில் உள்ளவருக்கு வடிவேலு கதை சொல்லி பிழைக்க வைத்தது போல் சில மர்மமான விஷயங்களும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிடும்.
ஆதலால் மரணத்தை எந்த ஒரு ஜோதிடரும் துல்லியமாக கணிக்கவே முடியாது.

அதே நேரத்தில் மரணம் நிகழ்ந்தால் மேற்கூறிய விதிகள் அனைத்தும் அந்த ஜாதகத்தில் கண்டிப்பாக 200% பொருந்தி இருக்கும்.

அதேநேரத்தில் Universal law செயல்படும்போது தனிமனித ஜோதிட விதிகள் செயல்படாது.
குண்டு வெடித்து ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் இறப்பது, சுனாமி, பூகம்பம், நோய், வறுமை இவை வலுவாக செயல்படும் பொழுது தனிமனித ஜோதிட விதிகள் விதிவிலக்குக்குள் வந்துவிடும்.

இறக்கும் நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாள் நரகமாகிவிடும்.

அதே நேரத்தில் சில நகைச்சுவையான நிகழ்ச்சிகளும் நடக்கும். சயனைடு சைடிஸ் ஆக மாறிவிடும். தீக்குளித்து தினமும் Skin ஆ Replace பண்ணிக்கலாம். தண்ணீர் பஞ்சம் வராது.சோப்பு கம்பெனிக்காரன் இழுத்து மூடிட்டு போக வேண்டிதான்.
பான்டாயில் பாயாசமா மாறிடும்.

பரங்கி மலையில் இருந்து குதித்து செத்து போகாமல் விளையாடலாம்.

நடுரோட்டில் பாயை விரித்து மல்லாக்க படுத்து பல்லாங்குழியும் விளையாடலாம். புல்டோசர் மேல ஏறிட்டு போனாலும் ப்போட்டி நசுங்காது.

இந்த கட்டுரை பல பேருக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஓம் நமசிவாய

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More