துலாம் ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 to 2021

குருபகவான் வரும் 2020. நவம்பர் மாதம் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் சுமார் ஒன்றேகால் மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைய இருக்கிறார். இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த குரு பகவான் கார்த்திகை மாதம் ஐந்தாம் தேதி முதல் நான்காம் இடமான மகர ராசியில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார்.

குருப்பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2020

கடந்த காலத்தில் மூன்றாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்கள் எதுவும் நல்க வில்லை. தங்க நகைகள் அடமானத்திற்கு போயின. மண்ணு, பொன்னு வேதையாக மாறின. வேதைனா பகையினு அர்த்தம்.

இடமாற்றம், வண்டி வாகனம் வகைகளில் செலவு, பற்றாக்குறை, செலவு, கடன் போன்ற சாதகமற்ற பலன்கள் நடந்து வந்தது.

கடந்த 24. 01. 2020 முதல் திருக்கணிதப்படி சனி பகவான் மகர ராசியில் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சாரம் செய்து வந்தார். நான்காம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனி பகவான் ஆட்சி வலுப்பெற்று தனித்து பத்தாம் இடத்தை பார்வை செய்ததால் தொழில், வியாபாரம், வேலை போன்றவற்றில சனியின் பார்வையால் பிரச்சனைகளை சந்தித்து வந்தீர்கள்.

சிலருக்கு வேலை போய்விட்டது. சிலருக்கு வியாபாரம் கொரனா வைரசால் படுத்துவிட்டது. சிலருக்கு போட்டி கம்பெனிகள், போட்டி கடைகள் புதியதாக முளைத்து, லாபத்தில் பங்கு போட்டன. தொழிலில் வியாபாரத்தில் லாபம் குறைவாக இருந்தது.

இதெல்லாம் நான்காம் இடத்தில் தனித்து இருந்து, பத்தாம் இடத்தைப் பார்த்த சனியின் பார்வையால் நிகழ்ந்தது. போதாக்குறைக்கு குரு பகவானும் மூன்றாம் இடத்தில் சாதகமற்ற இடத்தில் சஞ்சாரம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

வரக்கூடிய 2020 நவம்பர் மாதம் 20ஆம் தேதி வெள்ளிக்கிழமை, உங்கள் இராசிக்கு நான்காம் இடத்திற்கு பெயர்ச்சியாகும் குரு பகவான் சனியுடன் இணைந்து சனியை சுபத்தன்மை படுத்துவார். அதுமட்டுமல்லாமல் குருபகவான் நான்காம் இடத்தில் இருந்து பத்தாம் இடத்தை பார்த்து விடுவார்.

எனவே தொழில், வேலை, வியாபாரம் போன்றவற்றில் இருந்த சுணக்கங்கள் நீங்கும். தொழில் முன்னேற்றம் அடையும். வியாபாரம் விருத்தி அடையும்.

கடந்த ஜனவரி மாதம் முதல் தாயாருக்கு ஏற்பட்டு வந்த நோய்கள், பீடைகள் விலகும். முதலில் நான்காமிடம் சுப தன்மை அடைகிறது. அடுத்து பத்தாமிடம் சுபத்தன்மை அடைகிறது. சனி சுபத்தன்மை அடைகிறார். குருபகவான் இதுவரை சஞ்சாரம் செய்து வந்த மூன்றாம் இடத்தை காட்டிலும் இந்த நான்காம் இடம் எவ்வளவோ பரவாயில்லை ரகம்தான்.

தற்போது குருபகவான் சனியுடன் இணைந்து அர்த்தாஷ்டம குருவாக செயல்பட இருக்கிறார்.

“சொல்லப்பா சூதாட்டம் கொடியதப்பா
சுகமுள்ள பஞ்சவர்கள் வினையினாலே
அல்லப்பா அகிலங்கள் வினையினாலே
அப்பனே ஆரணியம் சென்றானவர்
நல்லப்பா நாலதனில் குருவுமேற
நரச்சுகம் கிட்டாது. நலிவுமுண்டு
மல்லப்பா மண்ணாலும், பொன்னாலும் வேதை; மகத்தான குருபதியின் கடாட்சத்தாலே;

என்று புலிப்பாணி முனிவர் நான்காமிடத்தில் அர்த்தாஷ்டம குருவைப்பற்றி திருவாய் மலர்ந்து அருளி உள்ளார். எனவே இந்த காலகட்டத்தில் சூதாட்டம், ஸ்பெகுலேஷன், ஷேர் மார்க்கெட், போட்டி பந்தயம், போன்றவற்றில் ஈடுபடாமல் இருப்பது ரொம்ப ரொம்ப நல்லது. அதனால் பண விரயங்கள், இழப்புகள், நஷ்டங்கள் ஏற்படும். அவமானங்கள் ஏற்படும்.

தங்கநகையை அடமானம் வைத்து நகை கடன் பெற வேண்டிய சூழ்நிலை இந்த குரு பெயர்ச்சியால் ஏற்படும். குரு பகவான் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் வேலையில்லா பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்துவிடும். குரு பகவான் தனது 9ம் பார்வையால் விரய ஸ்தானத் தைப் பார்ப்பதால் இந்த வருடம் வருமானத்திற்கு மேல் செலவு அதிகமாக இருக்கும். ஆயிரம் ரூபாய் வருமானம் வந்தால் 2000 ரூபாய் செலவு வரும். குடும்பத்தில் வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். அனைத்தும் சுப செலவுகளாக இருக்கும். சிலருக்கு வீடு கட்டும் யோகம் உண்டாகும். சிலருக்கு வாகனம் வாங்க கூடிய அமைப்பு உண்டாகும்.

பனிரெண்டாம் இடமான அயன, சயன, போக, ஸ்தானம் சுபத்தன்மை அடைவதால் கணவன், மனைவிக்குள் அன்னியோன்யத்திற்கு குறைவிருக்காது. குரு பகவான் நான்காம் இடமான அர்த்தாஷ்டம ஸ்தானத்தில் இருப்பதாலும், அதே இடத்தில் சனிபகவான் அர்த்தாஷ்டம சனியாக இருப்பதாலும் வாகனங்களில் செல்லும்போது அதிகமான கவனம் தேவைப்படும். சிறுசிறு விபத்துகள் நடப்பதற்கான வாய்ப்புக்கள் இருந்தாலும் குருபகவான் நான்காம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்தை, ஆயுள் ஸ்தானத்தை பார்த்து விடுவதால் ஆயுளுக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.

குரு பகவான் நான்காம் இடத்திலிருந்து எட்டாம் இடத்தையும், 12-ஆம் இடத்தையும் சுபத்தன்மை படுத்துவதால் வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைத்து விடும்.

மேலும் வருகிற 6, 4. 2021 அன்று முதல் குரு பகவான் மகர ராசியில் இருந்து அதிசாரமாக கும்ப ராசிக்கு சென்று 14. 9 2021 வரைக்கும் அங்கேயே சஞ்சரிப்பதால் அந்த இடம் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பதால் அங்கிருக்கும் குருபகவான் உங்களுக்கு அனேக நன்மைகளை தருவார் அந்த இடம் குருபகவானுக்கு மிகவும் பிடித்த இடமாகும். அந்த காலகட்டத்தில் திருமணமாகாத, ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் வெகு விமர்சையாக, ஆடம்பரமாக அமோகமாக நடந்து முடியும்.

பொதுவாக இந்த குருபெயர்ச்சியில் மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் எடுத்து படிக்க வேண்டும். படிப்பில் கவனக்குறைவு மற்றும் சோர்வு இருக்கும். வியாபாரிகள்,

தொழிலதிபர்கள் வேலைக்காரர்களிடம் ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் என்னசொன்னாலும் சரின்னுட்டு போய்ட்டே இருக்கனும். எதிர்த்து பேசக்கூடாது.

அரசியல்வாதிகள் தங்கள் திறமைக்கு தகுந்த பதவி கிடைக்காமல் அல்லாடுவார்கள். நியாயமாக தனக்கு கிடைக்கவேண்டிய பட்டம், பதவி, புகழ் தனக்கு கீழ் உள்ளவர்களுக்கு கிடைத்து அதனால் மன வேதனை அடைவார்கள். சனி பகவான் நான்காம் இடத்திலிருந்து பத்தாம் பார்வையாக துலாம் ராசியை பார்த்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளுக்கு லாபம் குறைவாக இருக்கும். விளைச்சல் இருக்காது. முட்டுவலி செலவுகள் அதிகரிக்கும்.

இந்த ராசியினர் பரிகாரமாக வியாழக்கிழமை, வியாழக்கிழமை குருபகவானுக்கு மஞ்சள் கலரில் மாலை அணிவித்து கொண்டைக்கடலை மாலை அணிவித்து இரண்டு நெய் விளக்கு போட்டு வர பரிகாரமாகும்.

ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் துலாம் ராசி 2020

இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சஞ்சாரம் செய்து வந்த ராகு பகவான் 23. 9. 2020 அன்று முதல் உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான ரிஷபத்தில் சஞ்சாரம் செய்து வருகிறார். இந்த இடம் ராகு பகவானுக்கு அவ்வளவு உகந்தது அல்ல. பொதுவாக 1, 7, 2, 8 இந்த இடங்களில் சஞ்சரிக்கும் ராகு கேதுக்கள் சர்ப்ப தோஷங்களை தருவார்கள்.

தாமதமான குடும்பம், குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை, திருமணத்தடை போன்றவற்றை இந்த இடங்களில் இருக்கும் ராகு கேதுக்கள் தருவதால் இந்த இடங்களில் ராகு, கேதுக்கள் இருக்கக்கூடாது. அப்படியே இருந்தாலும் குரு பார்வை பெற்றுவிட வேண்டும். எட்டாம் இடமான ரிஷப ராசியில் இருக்கும் ராகு பகவானுக்கு குருவின் பார்வை கிடைப்பது ராகுவால் வரக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் விலக்கக் கூடிய ஒரு நல்ல அமைப்பாகும். பொதுவாகவே இந்த ராகு கேதுக்கள் கெடுக்காமல் இருந்தாலே போதுமானது. நல்லதே செய்ய வேண்டாம். சும்மா இருந்தாலே போதுமானது.

துலா ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருக்கும் கேது பகவான் குடும்ப வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்துவார். வார்த்தையில் மிக கவனம் வேண்டும். நாவடக்கம் வேண்டும். யாருக்கும் அவ்வளவு சீக்கிரம் வாக்கு தர வேண்டாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவது கடினமான காரியமாக இருக்கும்.

பணவரவுகளில் கேது பகவான் தடையை ஏற்படுத்துவார். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். நேர்மையான வழிகளில் சம்பாத்தியம் இருந்தால் இரண்டாம் இடத்தில் இருக்கும் கேது பகவானால் பிரச்சினைகள் ஏதும் இல்லை.

பொதுவாகவே இந்த வருடம் ஆண்டு கிரகங்களின் சஞ்சாரம் அவ்வளவு சிறப்பாக துலாம் ராசிக்கு இல்லை என்பதே நிதர்சனம் ஆகும்.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More